3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87-வது கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இதில், கர்நாடகா மற்றும் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் அரசு சார்பில் கோரிக்கைகளை முன்வைத்தனர். கர்நாடகா தனது கோரிக்கை மனுவில், “செப்டம்பர் 25-ம் தேதி நிலவரப்படி கர்நாடகாவில் பருவமழை 53.04 சதவீதம் குறைந்துள்ளது. மாநிலத்தில் 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என கடந்த 13-ம் தேதி மாநில அரசால் அறிவிக்கப்பட்டது. இதில், 32 தாலுகாக்கள் காவிரி நீர்பிடிப்புப் பகுதியைச் சேர்ந்தவை. 34 தாலுகாக்கள் பகுதியாக வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 15 தாலுகாக்கள் காவிரி நீர்பிடிப்புப் பகுதியைச் சேர்ந்தவை. எனவே, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் நிலையில் கர்நாடகா இல்லை. கர்நாடகாவின் வறட்சியை காவிரி ஒழுங்காற்றுக் குழு உச்சபட்சமாக கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில், தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. காவிரி நதிநீர் பங்கீட்டில் அக்டோபர் மாதம் வரையிலான நீர் பங்கீடு 20.22 டிஎம்சி தண்ணீரை தரக்கோரி தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி ஒழுக்காற்று ஆணையம், தற்போதைய அணையின் நீர்வரத்து, மழை அளவு உள்ளிட்டவைகளை கணக்கிட்டு வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்கு விடுவிக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு தினசரி 5000 கன அடி தண்ணீர் வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கூறியும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.