உதயநிதியை டி.ஆர். பாலு எச்சரித்ததன் பின்னணி குறித்து சவுக்கு சங்கர் விளக்கம்!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு அவரை பொதுவெளியில் வைத்தே எச்சரித்தார். டி.ஆர். பாலு எச்சரித்ததற்கு பின்னால் இருக்கும் திடுக்கிடும் காரணங்களை கூறியிருக்கிறார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்.

சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதன் அதிர்வலைகள் இன்னமும் குறையவில்லை. குறிப்பாக, அவரது பேச்சு வட மாநிலங்களில் ஏற்படுத்திருக்கும் கொந்தளிப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல எனக் கூறுகின்றனர் அங்குள்ள மூத்த பத்திரிகையாளர்கள். சனாதனம் என்பது வட மாநிலங்களில் இந்து தர்மம் என்பதை குறிக்கும் என்பதால், இந்து மதத்தை அழிக்க வேண்டும் என ஸ்டாலினின் மகன் பேசியுள்ளார் பாருங்கள் என வட மாநிலங்களில் உள்ள பாஜக ஐடி ‘விங்’குகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதுபோன்ற சூழலில் தான், கடந்த வாரம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, “அப்பாக்கு மட்டும்தான் உதயநிதி பயப்படுறாரு. மத்த யாரை பார்த்தும் பயம் இல்ல. எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு, பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் என உதயநிதி நினைக்கிறார். இனி அப்படி அவர் இருக்கக் கூடாது. கையில் கிடைத்திருக்கும் பொருளை கீழே போட்டு உடைத்துவிடக் கூடாது” என ஸ்டாலினும், உதயநிதியும் மேடையில் இருக்கும் போதே டி.ஆர். பாலு எச்சரித்தார்.

இந்நிலையில், டி.ஆர். பாலு அவ்வாறு எச்சரித்தற்கு பின்னால் பல அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் பேச்சால் திமுகவுக்கு பல பாதிப்புகள் ஏற்படப் போவதாகவும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அர்விந்த் கேஜ்ரிவாலும், ராகுல் காந்தியும் ஒரே மேடையில் உட்கார்ந்து கைகுலுக்கி பேசுவாங்கனு சொல்லி இருந்தா யாராவது நம்பி இருப்பாமோ? சோனியா காந்தி இருக்குற கூட்டணியில் மம்தா பானர்ஜி இருப்பாங்கனு யாராவது நினைத்து பார்த்திருப்பாமோ? ஆனால் அதிசயமாக இன்றைக்கு ‘இந்தியா’ கூட்டணி என்கிற பெயரில் அது சாத்தியமாகி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த பாஜகவுக்கு, வேலையை ஈஸியாக முடித்துக் கொடுத்துவிட்டார் உதயநிதி.

திருமாவளவன் மாதிரி, கி. வீரமணி மாதிரி உதயநிதி பேசக் கூடாதுங்க. உதயநிதி சாதாரண ஆள் கிடையாது. அவர் ஒரு அமைச்சர்; முதல்வரின் மகன்; திமுகவின் அடுத்த தலைவராக வரப் போகிற ஒருவர்; இதை எல்லாத்தையும் தாண்டி, அவரது அப்பா மு.க. ஸ்டாலின், ‘இந்தியா’ கூட்டணியின் அடையாளமாக தன்னை நிறுவ முயற்சித்து வருகிறார். இந்த நேரத்தில், அவரது பையன் சனாதனத்தை பற்றி பேசினால் பாஜக சும்மா விடுமா? விடவே விடாது.

சனாதனம் பற்றி உதயநிதி பேசியதில் தவறு இல்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது அது பற்றி உதயநிதி பேசியதுதான் வரலாற்று தவறு. இது ஒரு “அரசியல் தற்கொலை”. சனாதனம் பற்றி 2021 சட்டமன்றத் தேர்தலின் போது உதயநிதி பேசினாரா? தைரியமான ஆளுனா அப்போ பேச வேண்டியதுதானே. அன்று எப்படியாவது ஓட்டு வாங்கணும்னு முருகரின் வேலை தூக்கிட்டு திரிஞ்சவர் தானே நீங்க. இப்போ தேர்தல் வருவதற்கு 6 மாசத்துக்கு முன்னாடி, ஏன் திடீர்னு உங்களுக்கு பெரியார் மீது பாசம் பொத்துட்டு வந்துருச்சு? ஓட்டுக்காக வேலை தூக்கிய போதே, பெரியார் பெயரை உச்சரிக்கும் தகுதியையே நீங்கள் (திமுக) இழந்துவிட்டீர்கள்.

இன்னைக்கு உதயநிதி பேசியது ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் புயலையே ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி நடக்காமல் பொதுமேடையில் உதயநிதியை டி.ஆர். பாலு எச்சரிக்க முடியுமா? அவர் நிலைமை என்னவாகும்? இதை எல்லாம் மீறி டி.ஆர். பாலு பேசியதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கிறது. நீங்க பாட்டுக்கு தமிழ்நாட்டில் இருந்துட்டு பேசிட்டீங்க. வட மாநிலங்கள் இப்போ பத்திட்டு எரியுது தெரியுமா உங்களுக்கு?
தென் இந்தியாவில் வேண்டுமானால் தேர்தலை மதம் தீர்மானிக்காமல் இருக்கலாம். ஆனால், வட இந்தியாவில் மதம் தான் தேர்தலை தீர்மானிக்குது. ஏன் உங்களுக்கு அது இன்னும் புரியல? இப்போ திமுக கூட்டணியில் இருக்கின்ற ஒரே காரணத்தால் காங்கிரஸால் வட மாநிலங்களில் ஓட்டுக்கேட்டு போக முடியாது. அது தெரியுமா உங்களுக்கு? மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்னு வரிசையா தேர்தல் வருது. அதுல காங்கிரஸ் ஜெயிக்க வேண்டாமா? இவங்க அப்பாவும், பிள்ளையும் பேசிட்டு போயிருவாங்க. காங்கிரஸுக்கு தானே கவலை. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.