காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பே கடைசி தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கர்நாடக மாநிலத்தின் பந்த் அறிவிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
அவர்களுடைய மாநிலத்தில் பந்த் நடத்துவது குறித்து நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத்தான், கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தில் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்றில் நீதித்துறை என்ன சொல்கிறதோ, அதை சட்டமன்றமும், நிர்வாகமும் பின்பற்ற வேண்டும் என்று கூறுவார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடத்த ஆரம்பித்தால், உச்ச நீதிமன்றத்துக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிற தனித்தன்மை, தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு பெற்றவர்கள் உணர வேண்டும். அதே நேரத்தில் உச்ச நீதிமன்றமும், தங்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது என்றால், அதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியதும் உச்ச நீதிமன்றம்தான்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு 5000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதாவது நாளையுடன் (செப்.27) அந்த 15 நாட்கள் கெடு முடிகிறது. இதனிடையே கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும், நமக்கு தரவேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடகா, ஆரம்பத்தில், 2500, 3000 கனஅடி என்ற வீதத்தில் தண்ணீர் வழங்கியது. இன்று காலை நிலவரப்படி 7000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, கணக்கிட்டால் இன்னும் நமக்கு 11000 கன அடி தண்ணீர் வரவேண்டியிருக்கிறது. நாளைக்குள் இந்த தண்ணீர் வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில், தமிழகத்துக்கு தேவையான 12,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவோம். தற்போது வரக்கூடிய தண்ணீரை வைத்து குறுவை சாகுபடியை சமாளித்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.