சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி: திலீபன் நினைவு நாள்!

உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் உரிமைப் போராட்டங்கள் ஆயுத வழியிலும் உண்ணாநிலை வழியிலும் நடத்தப்பட்டால் மட்டுமே ஒடுக்குமுறையாளர்களை குலை நடுங்க வைக்கின்றன.

அயர்லாந்து விடுதலைக்காக சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி உயிர் நீத்த பாபி சாண்ட்ஸ் பெயர் இன்றும் விடுதலையை நேசிப்பவர்களின் உதடுகளில் உச்சரிக்கப்படுகிறது.

காந்தியார் நடத்திய இந்திய விடுதலைக்கான அறப்போரில் அவரின் உண்ணாநிலைப் போராட்டங்கள் மக்களை போராடும் படி தூண்டியே வந்துள்ளது. காந்தியார் 17 முறை உண்ணாநிலை இருந்துள்ளார். அவரின் உண்ணாநிலைப் போராட்டங்கள் மூன்று வாரங்களுக்கு மேல் தாண்டியதில்லை.

அவரைப் போலவே இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட பகத்சிங்கின் தோழர் ஜிதீந்திராநாத் தாஸ் 1929இல் லாகூரில் 63 நாட்கள் உண்ணா நிலை இருந்து உயிர் துறந்தார். அவரின் மரணம் விடுதலைக் கனலை மேலும் மூட்டியது.

மணிப்பூர் மக்களை ஒடுக்கும் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க கோரும் இரோம் சர்மிளாவின் 14 ஆண்டு கால உண்ணாநிலைப் போராட்டம் அண்மையில் நிறைவடைந்தாலும் அந்தப் போராட்டத்தின் தாக்கம் பல்வேறு மக்களிடம் இன்னும் நீறுபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது.

1952இல் ‘விசாலா ஆந்திரம்’ கேட்டு 78 நாட்கள் உண்ணாநிலை மூலம் உயிர் நீத்தவர் பொட்டிசிறிராமுலு. அவரால் தெலுங்கு தேசிய இனம் விழிப்புணர்வு பெற்று தனி மாநிலம் கண்டது.

தமிழர்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டங்கள் வரலாறு நெடுகிலும் உள்ளது. சோழமன்னன் செங்கணானால் சிறைபிடிக்கப்பட்டவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை. அவன் தாகம் தீர்க்க தண்ணீர் கேட்ட போது அவமரியாதை செய்யப்பட்டதால் வடக்கிருந்து உயிர் நீத்தான். இது தமிழனின் முதல் வீர மரணமாகும்.

1956இல் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டக் கோரி 78 நாட்கள் சங்கரலிங்கனார் உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தார். பேராயக்கட்சியினர் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். அதன் பின்னர் ம.பொ.சி. அவர்கள் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்த காரணத்தால் சங்கரலிங்கனாரின் கனவு 11 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. பேரறிஞர் அண்ணா முதல்வராகி ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காந்திய நாட்டிற்கு அகிம்சை வழியில் பாடம் புகட்டியவர்கள் இரண்டு பேர். ஒருவர் அன்னை பூபதி. மற்றொருவர் திலீபன்.

1988இல் 31 நாட்கள் உண்ணாநிலை இருந்து அன்னை பூபதி உயிர் துறந்தார். திலீபனோ 1987இல் சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாநிலையை தொடர்ந்த நிலையில் சாவு அவரைத் தழுவியது. இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அமைதிப்படையை துரத்தியடிக்கும் ஆன்ம பலத்தை திலீபனின் மரணம் பெற்று தந்தது. பிரபாகரனின் படையோ இந்திய அமைதிப் படையை ஓட ஓட விரட்டியடித்து தமிழீழ மண்ணில் சாதனை படைத்தது.

முள்ளிவாய்க்காலில் ஒன்னரை இலட்சம் தமிழர்களை கொன்றொழிக்கத் துணைபோன இந்திய அரசை அன்றே தமிழீழ தேசிய விடுதலைக்கு பகைச்சக்தியாக தமிழருக்கு அடையாளம் காட்டிய திலீபனை போற்றி வணங்குவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்!

நன்றி: கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்