கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ அமைப்பு, நீதிபதிகளை தேர்வு செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்கிறது. அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தாமதம் செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு அடிக்கடி அதிருப்தி தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நீதிபதிகள் நியமன ஒப்புதலுக்கான காலவரையறையை பின்பற்றாததற்காக, மத்திய அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ”நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ‘கொலீஜியம்’ முன்வைத்த 70 சிபாரிசுகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளன” என்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு மீது அதிருப்தி தெரிவித்தது.
அதற்கு மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, இதுகுறித்து மத்திய அரசிடம் ஆலோசித்து பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டார். அதற்கு நீதிபதி எஸ்.கே.கவுல் கூறும்போது, ”உங்கள் பதவியை பயன்படுத்தி, இதற்கு தீர்வு காணுங்கள். நீங்கள் குறுகிய கால அவகாசம் கேட்டதால், இன்று நான் அமைதியாக இருக்கிறேன். அடுத்த தடவை அமைதியாக இருக்க மாட்டேன்” என்று தெரிவித்தார். அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.