கமல்ஹாசனின் கால்தூசிக்கு கூட உதயநிதி ஈடாக மாட்டார்: அண்ணாமலை

“கமல் சார்.., உதயநிதிகிட்ட போய் உங்க தன்மானத்தை அடகு வைக்கீறீங்களே..” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

தான் அரசியலுக்கு வரப் போகிறேன் என காலம் காலமாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய ரஜினியை போல இல்லாமல், அதிரடியாக அரசியலில் குதித்தவர் கமல்ஹாசன். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல அரசியல் அவரை சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. திமுக, அதிமுக என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கு மத்தியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போனது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். கோவையில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோற்று போனார் கமல்ஹாசன். இதையடுத்து, கமலின் அரசியல் பாதையில் வித்தியாசம் தெரிந்தது. அதுவரை திமுகவையும், கருணாநிதியையும் கடுமையாக வசைபாடி வந்த கமல்ஹாசனின் நடவடிக்கையில் இப்போது பெரிய மாற்றம் தெரிகிறது. சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், கருணாநிதியை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசினார்.

அது போதாதென்று, இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் பற்றிய கருத்துக்கு ஆதரவாக பேசினார். “என்னங்க இப்போ.. சனாதனத்தை பற்றி பேசிய ஒரே காரணத்தால் ஒரு சின்ன புள்ளைய (உதயநிதி) போட்டு இப்படி அடிக்கிறீங்க. அவர் ஒன்னும் புதுசா பேசல. அவரு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா எல்லாம் சனாதனத்தை எதிர்த்து பேசுனவங்க தான்” எனக் கூறினார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக தான் அவர் இப்படி இறங்கி பேசுகிறார் என நெட்டிசன்கள் தெரிவித்தனர். இந்த சூழலில், கோவையில் இன்று நடைபெற்ற ‘என் மண்; என் மக்கள்’ பாதயாத்திரையில் கமல்ஹாசனின் இந்த பேச்சை அண்ணாமலை விமர்சித்து பேசினார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது:-

கமல்ஹாசன் ஐயா சொல்றாரு.. ஏங்க விக்ரம் படத்திற்கு கூட்டம் வருதே. எனக்கு ஓட்டு போட மாட்டாங்களானு கேக்குறாரு. ஐயா, உங்க விக்ரம் படத்திற்கு ஏன் கூட்டம் வருதுனா, நீங்க நல்ல நடிகர். சிறந்த கலைஞர். உங்கள் நடிப்பை பார்ப்பதற்காக மக்கள் வருகிறார்கள். உங்க அரசியலுக்கு ஏன் மக்கள் ஆதரவு கொடுக்கல தெரியுமா? திமுகவை தைரியமாக எதிர்த்த நீங்கள், இன்னைக்கு உதயநிதி என்னென்ன சொல்றாரோ அதை செய்கிறீர்கள். அவர் உட்காருனு சொன்னா உட்காருறீங்க. எந்திரினு சொன்னா எந்திரிக்கிறீங்க. அதனால்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவு தரல.

உங்களை போன்ற மிகப்பெரிய கலைஞன், உங்க கால்தூசிக்கு கூட பெறாத உதயநிதி ஸ்டாலினிடம் போய் தன்மானத்தை அடகு வைக்கிறீங்களே.. கொள்ளையடிச்சு பணம் சம்பாதிச்சு வெச்சிருக்காங்க.. உங்க படத்தை இயக்குவதற்கு 100 கோடி கொடுக்குறாங்கனு உடனே உதயநிதியிடமும், ரெட் ஜெயண்ட் மூவிஸிடமும் உங்க தன்மானத்தை அடகு வெச்சிட்டு, எந்த தைரியத்தோட கோவையில் திரும்பப் போட்டி போட போறேனு சொல்றீங்க. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.