மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என்று 51 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.
மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ‘ரோஜ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழா மூலம் பிரதமர் மோடி பணிநியமன ஆணைகள் வழங்கி வருகிறார். நாடு முழுவதும் மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று 46 இடங்களில் நடந்தது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணிநியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தொடர் கண்காணிப்பு, அதிவேகமாக திட்டங்கள் நிறைவேற்றம், திட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில், புதிய மனப்பான்மையுடன் மத்திய அரசு பணியாற்றி வருகிறது. ஊழல் தடுப்பு ‘குடிமக்களுக்கு முன்னுரிமை’ என்ற நோக்கத்துடன் நீங்கள் பணியாற்ற வேண்டும். அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்த வேண்டும். பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், ரெயில் டிக்கெட் முன்பதிவு, டிஜிட்டல் லாக்கர் போன்றவற்றை தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு உதாரணமாக கூறலாம். இதனால் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. சிக்கல்களும் களையப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை, சவுகரியம் அதிகரித்துள்ளது. இந்த தருணம், வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளும், சாதனைகளும் மேற்கொள்ள வேண்டிய நேரம்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, நாட்டின் புதிய எதிர்காலத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மக்கள்தொகையில் பாதி உள்ள பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக மகளிர் இடஒதுக்கீடு அமைந்துள்ளது. 30 ஆண்டுகளாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிலுவையில் இருந்தது. இப்போது, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சாதனை அளவிலான ஓட்டுகள் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பலரும் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான யோசனை உதித்தபோது பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். புதிய இந்தியாவுக்கான கனவுகள் பெரிதானவை. விண்வெளியில் இருந்து விளையாட்டுகள்வரை பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆயுதப்படைகளிலும் அவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கு புதிய வாசல்களை திறப்பதுதான் மத்திய அரசின் கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.