சனாதனத்தை அழிக்க பலர் முயன்றனர், ஆனால் யாராலும் அழிக்க முடியவில்லை: ஆளுநர் ஆர்என் ரவி

சனாதனத்தை பற்றி சிலர் சுயநலத்திற்காக திரித்து பேசுவதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்ததாகவும் ஆனால் யாராலும் அழிக்க முடியவில்லை என்றும் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்தார்.

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா மற்றும் கொரோனாவை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்றார். அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இருப்பினும் திமுக எம்பி ஆ ராசா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சனாதனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணாநகர் பாலிமர் மடத்தில் சனாதன உற்சவ விழாவின் நிறைவு நாளில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது நாட்டில் ஆன்மிகவாதிகள் சென்ற இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறியுள்ளது. சனாதன தர்மம் நிலைத்து நிற்க ரிஷிகள், முனிவர்கள் போன்றோரின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்துள்ளது. சனாதனத்தின் அடிப்படை அத்தியாயம் நம் வேதங்களில் உள்ளது, ரிஷிகள், முனிவர்கள் வாழ்வியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு அதனை தந்துள்ளனர். பாரதம் உருவானதே சனாதன தர்மத்தில்தான். சனாதனத்தில் எல்லாம் உள்ளது. மரத்தின் அடி வேர் போல் இருப்பது சனாதனம். இலை இல்லாமல் கிளை இல்லாமல் மரம் வாழலாம். ஆனால் வேர் இல்லாமல் மரம் வாழ முடியாது. அந்தளவுக்கு சனாதன தர்மம் வாழ்வியலில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. சனாதன தர்மத்தின் மிகவும் முக்கியமான பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்கள் சனாதனம் தர்மத்தின் சான்றுகளாக இருக்கின்றன. எனவே, சனாதனத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது. அது, மண்ணோடும், மக்களோடும் நெருக்கமாக உள்ளது. யாரெல்லாம் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்களோ அவர்கள் இந்த நாட்டை சிதைக்க பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.