பத்திரிகையாளர் மீது மத முத்திரை குத்தும் சீமான்: பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!

பத்திரிகையாளரின் பெயரை கேட்டு, நீ அப்படிதான் பேசுவ என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம் தரம் தாழ்ந்து நடந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வழக்கம் போல, பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு பதிலை சொல்லாமல் உள் நோக்கம் கற்பித்ததோடு, பத்திரிகையாளரை தற்கொலை செய்து கொள்கிறாயா என்றும், பெயரை கேட்டு சிராஜுதீன் என்றவுடன், “அப்படியா அப்பன்னா இப்படிதான் பேசுவ” எனவும் வரம்பு மீறியுள்ளார் சீமான்.

பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலை சொல்வதும், சொல்லாததும் அவரவர் தனிப்பட்ட உரிமை. அதிலும், பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்ட தலைவர்கள் தங்களது கட்சி, மக்கள் நலன் சார்ந்து பத்திரிகையாளர்கள் வினா எழுப்பினால் அதற்கு தகுந்த பதில் கூற கடமைப்பட்டவர்கள்தான். அதையும் மீறி பதில் சொல்ல முடியாத, விரும்பாத பட்சத்தில் அக்கேள்வியை தவிர்த்துவிட்டு கடந்துபோவதும் அவர்களின் உரிமைதான். ஆனால், செய்தியாளர் சந்திப்பு என்று கூறி அழைத்துவிட்டு, தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும், அல்லது தனக்கு சாதகமானவற்றை மட்டுமே கேட்க வேண்டும் என்றால் அந்த சந்திப்புக்கான பயன் தான் என்ன? இவை எதுவும் தெரியாதவர் அல்ல சீமான். அனைத்தையும் அறிந்தேதான் போகும் இடத்தில் எல்லாம், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உள்நோக்கம் கற்பித்து வீண் பிரச்சனைகளில் ஈடுபடுவதை வழக்கமாகவே அவர் கொண்டுள்ளார்.

அந்த வகையில், கும்பகோணத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, மீண்டும் அவர் எல்லை மீறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு வாக்களிக்காத சிறுபான்மை மக்கள் அனைவரும் சாத்தானின் பிள்ளைகள் எனக்கூறி தனது ஆழ்மன வெறுப்பை உமிழ்ந்த சீமான், தனக்கு பிடிக்காத கேள்வியை கேட்ட பத்திரிகையாளரின் பெயரை கேட்டதோடு, சிராஜுதீன் என பதில் அளித்ததும், “சிராஜா.. அப்ப அப்புடிதான் பேசுவ..” எனக்கூறி தன்னைத்தானே அசிங்கப்படுத்தி கொண்டுள்ளார். அப்படி என்றால் சீமான் என்னதான் சொல்ல வருகிறார்? இஸ்லாமியர்கள் என்றால் இப்படித்தான் என முத்திரை குத்த முயல்கிறாரா? கேள்வியை கேள்வியாக அணுகாமல், மத அடிப்படையில் ஒருவரை முத்திரை குத்தும் இந்த கேவலமான செயலுக்கு சீமானை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் மிக மிக வன்மையாக கண்டிக்கிறது .

இந்தியா முழுவதுமே மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை சில கும்பல்கள் திட்டமிட்டு பரப்பி வரும் நிலையில், அதற்கு ஒத்து ஊதுவது போல் உள்ளது சீமானின் மத சிறுபான்மையினர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள். நல்லிணக்கத்துக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் சீமானின் இந்த வெறுப்பு பேச்சுகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றாலும், முழுக்க முழுக்க வன்மம் நிறைந்த வஞ்சக பேச்சுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மேலும், அந்த பத்திரிகையாளரை விஷம் குடிக்கிறாயா? தூக்கில் தொங்குகிறாயா? என, தனது கட்சிக்காரர்களை கேட்பதுபோல் கேட்டு, அசிங்கமாக சீறியுள்ளார் சீமான். கேட்ட கேள்விக்கு பதிலை நேரடியாக கூறாமல், “நீ எந்த நிறுவனம்?” என்றும், “அந்த பத்திரிகை என்ன அவ்வளவு கேவலமாகிவிட்டதா?” என்றும் தனக்கு பின்னால் இருக்கும் 7 பேர் சிரிப்பதற்காக வார்த்தைகளை தேவையின்றி விரயமாக்கியுள்ளார்.

சீமானும், சீமான் போன்ற அரசியல்வாதிகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் ஒன்றும் உங்களோடு தேர்தலில் போட்டி போட்டு, ஓட்டு கேட்டு வரப்போவதில்லை. அதனால் கேள்விகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பயந்து பாய்வதை விட்டுவிட்டு, சக போட்டியாளர்களான அரசியல் கட்சிகள் மீது பாயுங்கள். ஒவ்வொரு பேட்டியின் போதும் ஏதாவது பத்திரிகையாளரை சிறுமைப்படுத்துவதாக நினைத்து சீர்கெட்டு போவதை இனியாவது சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். தங்கள் கடமையை செய்யும் பத்திரிகையாளர்களிடம் வரம்பு மீறுவதையும், அத்துமீறுவதையும், அடாவடியாக நடந்து கொள்வதையும் சீமான் விட்டுவிட்டு, தான் அடியோடு மாற்றப்போவதாக மார்தட்டிக்கொள்ளும் அரசியலை மட்டும் பார்க்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறது.

அதோடு, சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரிடம் சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன், தனது கட்சிக்காரர்களை விட்டு அவருக்கு மிரட்டல் விடுப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறிவுறுத்துகிறது. ஜனநாயக அத்துமீறலில் ஈடுபடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள இதுபோன்றவர்களை கண்டிப்பதற்கும், பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு தோள் கொடுப்பதற்கும் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் முன்வர வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.