மத்திய அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய அமைச்சர் எல் முருகன் பேசியிருந்தார். இவருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்டுள்ள கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரைவில் மத்திய இணை அமைச்சராக இருப்பவர் எல் முருகன். தமிழக முன்னாள் பாஜக தலைவரான இவர் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் தான் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என அவர் தெரிவித்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அவதூறு பரப்பும் வகையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு என்பது சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே தனக்கு எதிரான இந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அவதூறு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எல் முருகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனு தொடர்பாக 6 வாரங்களில் பதிலளிக்க முரசொலி அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. அதோடு மத்திய அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.