தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் ‘கேஆர்எஸ் சலோ’ போராட்டம் நடத்தப்படும் என கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 15-ந் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இன்றைய உத்தரவு. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரமுடியாது என்பது மாநில அரசின் நிலைப்பாடு என அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. மேலும் காவிரி நீரை திறந்துவிட முடியாது என்ற நிலைப்பாட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள்- அதாவது ஆட்சி கலைப்பு, ராணுவம் மூலம் மாநில அணைகளை மத்திய அரசு கைப்பற்றுதல் ஆகியவற்றின் சாத்தியங்கள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப் போவதாகவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இன்று கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. தலைநகர் பெங்களூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதும் தடையை மீறி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மண்டியா, ஹாசன், சாம்ராஜ் நகர், மைசூர் ஆகிய இடங்களிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பெங்களூர் போராட்டத்தில் தடையை மீறி பங்கேற்ற கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், அக்டோபர் 5-ந் தேதி கேஆர்எஸ் சலோ போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் பெங்களூர் மைசூர் சர்க்கிளில் இருந்து பேரணியாக புறப்பட்டு கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளார்.