நடிகர் சித்தார்த்தை பெங்களூரில் கன்னட பிரமுகர்கள் மிரட்டியதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ‘சித்தா’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூர் சென்றுள்ளார். அங்கு நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது சிவப்பு – மஞ்சள் நிற துண்டு போட்டுக்கொண்டு அங்கு வந்த கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சித்தார்த்தை கன்னட அமைப்பினர் மிரட்டியதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், “பெங்களூரில் சினிமா தொடர்பான ஒரு பிரஸ் மீட் நிகழ்வில் நடிகர் சித்தார்த்தை கன்னட பிரமுகர்கள் காவிரி விவகாரத்தை காரணம் காட்டி பகிரங்கமாக மிரட்டி அவரை வெளியேற்றியுள்ளனர். அவர் சமூக பொறுப்புணர்வுமிக்க கலைஞர். அவரை மிரட்டி அவமானப்படுத்தியதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.