சித்தார்த் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசாதது ஏன்?: வன்னி அரசு

பெங்களூரில் நடிகர் சித்தார்த்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் புகுந்து கன்னட அமைப்புகள் கலாட்டா செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ரஜினிகாந்த் பேசாதது ஏன் என வன்னி அரசு கேள்வியெழுப்பியுள்ளார்.

காவிரி நீரை கர்நாடக மாநிலத்திடமிருந்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் முட்டி மோதி வருகிறது. கேட்கும் நீரை கொடுக்காமல் பல காரணங்களை சொல்லி தவிர்த்து வரும் கர்நாடக அரசு இந்த முறை போதிய மழை இல்லை என்கிற சாக்கு போக்கை கூறியுள்ளது. இருப்பினும் தமிழக அரசு உரிய நீரை பெறுவதில் விடாப்பிடியாக இருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஏற்கெனவே மாண்டியாவிலும், பெங்களூரிலும் பந்த் போராட்டத்தை நடத்திய இந்த அமைப்புகள், இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை நடத்தி வருகிறது.

இப்படி இருக்கையில் நேற்று ‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூரில் நடைபெற்றது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படி இருக்கையில் செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பை நிறுத்துமாறு வலியுறுத்தினர். “காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு போகிறது. நீங்கள் இப்போது தமிழ்ப்படம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இப்போ இதெல்லாம் அவசியமா? வீதிக்கு வந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று போராடுங்கள் வாருங்கள்” என்று ஆவேசமாக கூச்சலிட்டனர். இதனையடுத்து மேடையிலிருந்து சித்தார்த் கீழிறங்கி, அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஒரு நடிகர் இவ்வாறான நெருக்கடியை சந்தித்தபோது ரஜினிகாந்த் ஏன் மவுனம் காக்கிறார்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது, “காவிரி பிரச்சனையை வைத்துக்கொண்டு நடிகர் சித்தார்த்தின் ஊடகவியலாளர் சந்திப்பை ரகளை செய்து நிறுத்தியுள்ளது கன்னட இனவெறி அமைப்பு. இப்போக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டுமே துணிச்சலுடன் கண்டித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு திரைத்துறையினர் இதுவரை கண்டிக்க முன் வரவில்லை. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கள்ள மவுனம் காக்கிறார். உண்மையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களா? அல்லது பிரகாஷ்ராஜ் அவர்களா?” என்று எக்ஸ் சோஷியல் மீடியா தளத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.