குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 பேர் பேருந்து மூலமாக நேற்று முன்தினம் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, ஊட்டியில் இருந்து நேற்று மாலை கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, சரக டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலமாக குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி 8 பேர் உயிரிழந்திருப்பதும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, குறுகிய வளைவில் பேருந்து திரும்பியபோது ஸ்டியரிங் லாக் ஆனதால், பேருந்து திருப்ப முடியாமல் பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குன்னூர் கோர விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குன்னூர் விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. என் எண்ணங்கள் முழுவதும் உயிரிழந்தோரின் குடும்பங்களுடனே உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக தலா 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டார். மேலும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.