மாலத்தீவு அதிபர் தேர்தலில் மக்கள் நேஷனல் காங்கிரஸ் கட்சியின் முய்ஜு வெற்றி!

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்கள் நேஷனல் காங்கிரஸ் கட்சியின் முய்ஜு வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடா மாலத்தீவு. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக இருக்கும் மாலத்தீவில் மொத்த மக்கள் தொகையே 5.21 லட்சம் தான். தீவு கூட்டங்களைக் கொண்ட மாலத்தீவு, புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு முக்கிய நாடாக இருக்கிறது. இதனால் இந்தியா மாலத்தீவுக்குப் பல உதவிகளைச் செய்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி அங்கே சீனாவும் தொடர்ச்சியாகப் பல உதவிகளைச் செய்து வருகிறது. இதனால் மாலத்தீவு தேர்தல் முடிவுகளை இந்தியா, சீனாவுக்கும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மாலத்தீவு தேர்தலில் அதிபராக இருந்த மாலத்தீவு ஜனநாயக கட்சியின் ப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சியின் முகமது முய்ஜு ஆகியோர் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதில் ப்ராஹிம் முகமது இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். 2018 முதல் அதிபராக இருந்த ப்ராஹிம் முகமது இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதேநேரம் முகமது முய்ஜு சீனா ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர். அங்கே இந்தியா வெளியேறு என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்திருந்தார். மாலத்தீவு நாட்டின் விதியின்படி எந்தவொரு வேட்பாளருக்கு 50% மேல் வாக்குகள் கிடைக்கிறதோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் முய்ஜு இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் சீனா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த வேட்பாளர் முகமது முய்ஜு வெற்றி பெற்றுள்ளார். இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அவருக்கு 54.06 சதவீத வாக்குகள் கிடைத்தன. 45 வயதான முய்ஜூ, அங்குள்ள அவரது ஆடம்பர கடற்கரை ரிசார்ட்டுகளுக்கு புகழ் பெற்றவர். அவர் வரும் நவ.17ஆம் தேதி மாலத்தீவு அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

கடந்த 2018இல் நடந்த தேர்தலில் வென்று, கடந்த 5 ஆண்டுகள் மாலத்தீவு அதிபராக இருந்தவர் ப்ராஹிம் முகமது. இவர் அதிபரான பிறகே இந்தியா- மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பாக இருந்தது. பொருளாதாரம் மற்றும் ராணுவத் துறைகளில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மறுபுறம் இந்தியாவும் மாலத்தீவுக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தைப் பரிசாகக் கொடுத்தது. இப்படிக் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா மாலத்தீவு உறவு சிறப்பாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் அங்கே ப்ராஹிம் முகமது தோற்கடிக்கப்பட்டுள்ளார். சீனா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சியின் முகமது முய்ஜு வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2013இல் இதே மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் சீனாவின் பல திட்டங்களுக்கு மாலத்தீவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாகச் சீனாவின் கனவுத் திட்டமாக அறியப்படும் ரோடு அண்ட் பெல்ட் திட்டத்திற்கும் ஒப்புதல் தரப்பட்டது. மேலும், இந்தியா உடன் மோதல் போக்கு இருந்ததும் இந்தக் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில்தான். இந்தச் சூழலில் மீண்டும் இப்போது அதே மக்கள் நேஷ்னல் காங்கிரஸ் கட்சியின் முகமது முய்ஜு மாலத்தீவு அதிபராகத் தேர்வாகியுள்ளார். இதனால் வரும் காலத்தில் இந்தியா மாலத்தீவு உறவு மீண்டும் சிக்கலானதாக மாற வாய்ப்பு உள்ளது.