என்னை நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை: வெற்றிக்குமரன்

“நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக கட்சியில் இருந்து என்னை நீக்கினீர்கள்? மாநிலப் பொறுப்பில் இருக்கும் என்னை நீக்குவதற்கு உங்களுக்கு (சீமான்) அதிகாரம் இல்லை” என்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், சீமானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஒருகாலத்தில் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவரும், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வெற்றிக்குமரன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக சீமான் மீது அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், வெற்றிக்குமரன் நீக்கப்பட்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, தன்னை கட்சியில் இருந்து நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை என்றும், நாம் தமிழராகவே தொடர்வேன் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளார் வெற்றிக்குமரன். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெற்றிக்குமரன், சீமானுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

2002-ம் ஆண்டு உங்களை நான் சந்தித்தேன். உங்கள் வசீகரப் பேச்சாலும், அன்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒரு தம்பியாக, ஒரு தோழனாக உங்களுடன் தொடர்ந்தேன். மதுரைக்கு நீங்கள் வரும் போதெல்லாம் தமுஎச, திராவிட இயக்கக் கூட்டங்களுக்கு ஊர் ஊராக உங்களை அழைத்துச் சென்றவன் நான். பின்னர் ஏன் நாம் ஒரு இயக்கமாக செயல்படக் கூடாது என நான் உங்களிடம் கேட்டதை அடுத்து, இயக்குநர் மணிவண்ணன் வீட்டில் நடந்த கூட்டத்தில் உருவானதுதான் நாம் தமிழர் கட்சி என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

ஒரு பொறியாளராக சிறப்பாக தொழில் செய்து வந்த நான், அன்று முதல் உங்களுடன் அரசியல் களத்தில் இறங்கினேன். அதுவரை வழக்கு, சிறை என எதுவும் அறிந்திடாத நான், ஈவிகேஸ் இளங்கோவன் வீட்டில் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டேன். வெடிகுண்டு வழக்கில் கைது என்றவுடன் என் குடும்பம் நிலைக்குலைந்தது. என் தம்பி இன்ஜினியர். எனக்காக சிறை சென்றவன் எனக் கூறி நீ்ங்கள் பெருமைப்பட்டீர்கள்.

நாம் தமிழர் கட்சியாக உருவாகி மதுரையில் மாநாடு நடைபெற்றது வரை அனைத்திலும் உங்களுடன் சேர்ந்து பயணித்ததால் என்னுடைய புகைப்படமும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் வெளியாகியது. இதனை பார்த்தவர்கள் என்னை பெரிய ஆள் என நம்பினார்கள். அதனால் எனக்கு கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்பு குறைந்து போனது. சேமிப்பாக இருந்த பணமும், சொத்துகளாக இருந்த நிலங்களும் கட்சிக்காக ஓடி ஓடியே காணாமல் போனது. ஆனால், காலப்போக்கில் உங்களுக்குள் மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

மேடையில் பேசுவதற்கு முன்பு கூட காரில் பேசி காண்பித்து தம்பிகளின் விருப்பத்தை அறிந்து மேடையில் பேசுவீர்கள். ஆனால், இப்பொழுது நான் சொல்வதை கேட்டால் கட்சியில் இரு. இல்லாவிட்டால் வெளியேறு என்கிறீர்கள். தம்பியாக இருந்த நான், தம்பியாகவே இருந்துவிட்டேன். அண்ணனாக இருந்த நீங்கள், தம்பியை மறந்த தலைவராக மாறிவிட்டீர்கள். நேற்று இரவு என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒரு கடிதத்தை சமூக வலைதளத்தில் கண்டேன். அது உண்மை என்றால், என்ன காரணத்திற்காக என்னை நீக்கினீர்கள்?
நான் செய்த தவறு என்ன? நான் தவறு செய்திருந்தால் என்னை கண்டிக்கவும், தண்டிக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கின்ற பொழுது, கடந்த ஆறு மாதங்களாக என் அழைப்பை ஏற்க மறுத்தது ஏன்? யாரோ ஒருவர் உங்களிடம் என்னை பற்றி கூறினாலும் உங்களால் எப்படி அதை நம்ப முடிந்தது? 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய என்னை, உங்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? உங்கள் மீதான அதீத அக்கறையால் உங்கள் தோள் மீது உட்கார்ந்திருக்கும் ஒருவனிடம் உங்களை பற்றி பேசி வருந்தி புலம்பினேன். அதை தவிர வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை.

பதவிக்காகவும், இன்ன பிற சுகத்திற்காக காத்துக் கிடப்பவன் தான் காலில் விழுந்து கிடப்பான். நான் நல்லவன். நேர்மையானவன். யாரிடத்திலும் மண்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம். எல்லாம் தெரிந்த உங்களுக்கு நம் கட்சியின் விதிகள் தெரியாதது கவலை அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின்படி, என்னை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது. மாநிலப் பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே நாம் தமிழராகவே தொடர்கிறேன். இவ்வாறு அந்தக் கடிததத்தில் வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.