ஊட்டியில் 50 அடி ஆழத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து: 8 பேர் பலி

உதகை மாவட்டம் குன்னூரில் நிகழ்ந்த பயங்கர பஸ் விபத்தில் தென்காசியை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த 55 பேர் சில தினங்களுக்கு முன்பு உதகை மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஊட்டியை சுற்றிப்பார்த்த அவர்கள், அங்கிருந்து மீண்டும் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக சுற்றுலா பேருந்தில் நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இரவு 8 மணியளவில் அந்தப் பேருந்து மேட்டுப்பாளையம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தது. இதில் மரப்பாலம் என்ற இடத்திற்கு அருகே வந்த போது ஒரு கொண்டை ஊசி வளைவில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் அங்கிருந்த மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது. சுமார் 50 அடி ஆழம் உள்ள அந்தப் பள்ளத்தாக்கில் பஸ் செங்குத்தாக விழுந்து நொறுங்கியது. இதனை பார்த்த அங்கிருந்த மக்கள், உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் இறங்கினர். இரவு நேரம் என்பதால் மின்சார விளக்குகளை ஒளிரவிட்டபடி மீட்புப் பணிகள் நடந்தன. இந்த விபத்தில் அனைவரும் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி 5 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 8 பேர் பலியாகி உள்ளனர் என்றும் அரசு முழு வீச்சில் செயல்பட்டதாகவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேருந்தில் 60 பேர் பயணம் செய்தனர். மீட்புக் குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டனர். 8 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு முழு வீச்சில் செயல்பட்டது. முதல்-அமைச்சர் நிவாரண நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளார்.. அதனால், தற்போது ஒட்டுமொத்த குழுவும், அரசு இயந்திரமும் தயார் நிலையில் உள்ளது” என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.