29.70 லட்சம் முறை சென்னையில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், காலியிடங்களில் புதிய ஓட்டுனர்களை உடனே நியமிக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான ஓட்டுனர் பற்றாக்குறை காரணமாக 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 29.70 லட்சம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டதாக – புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுமொத்த சேவைகளில் ஆறில் ஒரு பங்கு சேவை, ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்படுவது போக்குவரத்துத் துறைக்கு தலைகுனிவாகும்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3454 பேருந்துகள் உள்ளன. அவற்றைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 3233 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அவற்றை இயக்குவதற்காக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 8487 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஏராளமான ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் 500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தினமும் 500 பேருந்துகள் இயக்கப்படாததால் ஓராண்டில் 29.70 லட்சம் முறை சென்னையில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பேருந்தில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 75 பயணிகள் பயணிப்பதாக வைத்துக் கொண்டால், 2022-23ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் 22.27 கோடி பேர் மாநகர பேருந்து சேவை கிடைக்காமல் அவதிப்பட்டிருப்பார்கள். இது போக்குவரத்துத் துறையின் கடமை தவறுதல் ஆகும்.
சென்னை மாநகர மக்களுக்கு பேருந்து சேவை வழங்க வேண்டியது தான் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முதன்மை கடமை ஆகும். ஆனால், அதன் ஒட்டுமொத்த சேவையில் ஆறில் ஒரு பங்கு சேவை ஓட்டுனர் பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றால், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மக்களுக்கு சேவை செய்யும் தகுதியை இழந்து விட்டது என்று தான் பொருள் ஆகும். மக்களுக்கு சேவை செய்யும் விஷயத்தில் மாநகரப் போக்குவரத்துக்கழகம் செய்த இந்தத் தவறை மன்னிக்க முடியாது. சென்னை மாநகரத்தில் மெட்ரோ தொடர்வண்டி, புறநகர் தொடர்வண்டி, பறக்கும் தொடர்வண்டி என பல சேவைகள் இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் பேருந்துகளைத் தான் நம்பியிருக்கின்றனர். சென்னையில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்படாத நிலையில் அடித்தட்டு மக்களின் போக்குவரத்துத் தேவைகளை மாநகரப் போக்குவரத்துக்கழகம் தான் நிறைவேற்ற வேண்டும். அதற்காகத் தான் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்யத் தவறிய மாநகரப் போக்குவரத்துக் கழகம், அதனிடம் உள்ள பேருந்துகளிலேயே தினமும் 500 பேருந்துகளை இயக்கத் தவறியிருக்கிறது என்றால் அது செயல்பட முடியாமல் முடங்கி விட்டது என்று தான் கருத வேண்டியுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படாத பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகரிக்கக் கூடும். அதற்கு காரணம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் சேர்த்து சுமார் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதனால், நடப்பாண்டில் இன்னும் கூடுதலாக 100 பேருந்துகளை இயக்க முடியாமல் போகலாம். இதை சுட்டிக்காட்டி, 26.06.2023-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட நான், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், இன்று வரை ஒரே ஓர் ஓட்டுனரைக் கூட அரசு நியமிக்கவில்லை. சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவே தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2014-15 ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் ஒரு நாளைக்கு இயக்கப்பட்ட மொத்த தொலைவு 91.90 லட்சம் கி.மீ ஆகும். 2023 பிப்ரவரியில் இது 77.71 லட்சம் கி.மீ ஆக குறைந்து விட்டது. 9 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்க தூரம் சுமார் 14.19 லட்சம் கி.மீ, அதாவது 15.59% வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது போக்குவரத்துக்கழகங்களின் வரலாற்று வீழ்ச்சி ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஒட்டுமொத்தமாக காலியாக உள்ள 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.