சிவாஜி கணேசன் படத்துக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தமிழக வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், த.வேலு எம்எல்ஏ உள்ளிட்டோரும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம்பிரபு மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர்கள் நிழல்கள் ரவி, சந்தானபாரதி, மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் ஆகியோரும் சிவாஜி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் சிவாஜி படத்துக்கு விஜய் வசந்த் எம்.பி., மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலை இலக்கியபிரிவு சார்பில் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவும், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கவியரங்கம் மற்றும் வாழ்த்து அரங்கம் நடைபெற்றன.

சிவாஜியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை, அனல் பறக்க தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.