காவிரி விவகாரத்தில் தமிழகம், கர்நாடகாவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. வரும் 6 ஆம் தேதி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
‘மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு’ என்றார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அவரது வழியில், காவல் தெய்வங்களாக நின்று கழகத்தையும், நம்மையும் கட்டிக் காத்து வரும் கழக நிறுவனத் தலைவர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், மக்களுக்குத் தொண்டு செய்திட வேண்டும்; எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, விவசாயிகளின் நண்பனாக, அவர்களது நலம் விரும்பியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகால கழக ஆட்சியின்போது, மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணம் என்றும், வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்கள் அவர்களுடைய நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அம்மாவின் அரசு இதுமட்டுமல்ல, தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற்று விளங்க வேண்டும் என்பதற்கு பழந்தமிழனின் ‘குடி மராமத்து – தூர் வாருதல்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூர் வாரப்பட்டது. அவ்வாறு வாரப்பட்ட வண்டல் மண் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாக இலவசமாக வழங்கப்பட்டது. மேட்டூர் அணை முதன் முதலாக தூர் வாரப்பட்டது. இப்படி விவசாய நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு உறுதுணையாக இருந்ததன் காரணமாக, 5 முறை மத்திய அரசின் ‘க்ருஷி கர்மான்’ விருதினைப் பெற்றது.
ஆனால், நானும் ‘டெல்டாகாரன்’ என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திரு. ஸ்டாலினின் தலைமையிலான விடியா திமுக அரசு பதவியேற்றபின் விவசாயிகளுக்கு குறிப்பாக, டெல்டா விவசாயிகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம்; வானிலை ஆராய்ச்சி மையத்தின் எதிர்வரும் பருவமழை பெய்தல் பற்றிய ஆலோசனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களுக்கு தன்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு 100 அடிக்குமேல் தண்ணீர் உள்ளது என்ற ஒரே காரணத்தால், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், ஜூன் மாதம் 12-ஆம் தேதியே முன்யோசனையின்றி தண்ணீரைத் திறந்துவிட்டார். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது என்றவுடன் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத் தீர்ப்பின்படி, மேட்டூர் அணையில் தண்ணீர் குறைய ஆரம்பித்தவுடன், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நமது பங்கு நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் அந்தந்த மாதங்களிலேயே பெற்றிருக்க வேண்டும்.
கடந்த மே பாதத்தில் நடைபெற்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கலந்துகொண்டபோது, மே மற்றும் ஜூன் மாதங்களில் கர்நாடகா தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக் கூட்டம் பாட்னாவில் கூடியபோது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, தன் மாநில மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வசிக்க சம்மதித்ததோ, அதேபோன்று, காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரைத் திறந்துவிட்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம். என் மாநில மக்கள் நலனே முக்கியம் எனவும், “நானும் ஒரு டெல்டாகாரன்தான்” எனவும் தெரிவித்து, திரூ. ஸ்டாலின், பெங்களூருவில் நடைபெற்ற இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இதையெல்லாம் செய்யாமல், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த விடியா திமுக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடுகூட செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியில், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார் என்பவர், போதிய தண்ணீர் இல்லாததால் நீரின்றி காய்ந்து கருகிய குறுவை நெற்பயிர்களை ‘தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்’, விவசாயி ராஜ்குமார் அவர்களே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். குறுவை பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகிய பிறகு, ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல், நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகும். காலம் கடந்து பெயரளவிற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது: மத்திய அமைச்சரை நேரில் பார்ப்பது: காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்வது மற்றும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது என்று அனைத்து நடவடிக்கைகளையும் காலதாமதமாக மேற்கொண்டது இந்த விடியா திமுக அரசு. டெல்டா மாவட்டங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் பேச்சை நம்பி, சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்ட நிலையில், தண்ணீர் இல்லாமல் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகின.
எனவே, உரிய காலத்தில் கர்நாடக அரசிடம் தண்ணீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாத விடியா திமுக அரசைக் கண்டித்தும்; * குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்த விடியா திமுக அரசைக் கண்டித்தும்; * உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்; கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 35,000/- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்கிட விடியா திமுக அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 6.10.2023 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் வருவாய் மாவட்டங்கள்: * திருவாரூர் மாவட்டம்: தலைமை ஏற்போர், திரு. R. காமராஜ், M.L.A., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் * நாகப்பட்டினம் மாவட்டம்: திரு.O.S.மணியன், M.L.A., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் * தஞ்சாவூர் மாவட்டம்: டாக்டர் C. விஜயபாஸ்கர், M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா உட்பட) முன்னாள் அமைச்சர் * மயிலாடுதுறை மாவட்டம்: திரு. R.B. உதயகுமார், M.LA., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் * கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியான சிதம்பரம் (சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு): திரு. செ. செம்மலை அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமைக் சுழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிரிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா விவசாயிகள், தஞ்சையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.