காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் 91 லட்சம் பேர் தொடர்ச்சியாக வேலை செய்து வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் 60,000 பயனாளிகள் உள்ளனர். இதில் 25,000 பயனாளிகளை நேரில் சந்தித்துள்ளேன். இதனால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதில் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கக்கோரி கடந்த செப்.13-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன். இதுவரை பதிலில்லை. நாடு முழுவதும் உள்ள வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு ஊதியமாக வழங்க மட்டும் ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி செலவாகும். இதுவன்றி அப்பணிகளுக்கும் நிதி தேவை. ஆனால் ரூ.60,000 கோடி மட்டுமே இப்பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22ம் நிதியாண்டை விட 18 சதவீதம் குறைவு. மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டனர். மிக வேதனையானது. மத்திய அரசு இதற்கு பதில் தரவேண்டும். உடனடியாக ஊதிய பாக்கியை வழங்கவேண்டும்.
காவிரி கோரிக்கையை கர்நாடகா அரசு ஏற்காதது அநீதியானது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரை எம்.பிக்கள் சந்தித்தோம். தமிழகத்துக்கு கர்நாடகா அரசு அநீதி இழைக்கிறது. காவிரியில் 12,000 கனஅடி நீர் திறக்கவேண்டும் என்ற நிலையில் 5,000 கன அடி திறக்கவேண்டும் என உத்தரவிடுவது தவறாகும். இது சலுகை அல்ல. உரிமை. தமிழகத்தின் காவிரி கடைமடை வரை விவசாயத்திற்கும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீருக்கும் ஆதாரமாக காவிரி உள்ளது. கர்நாடகாவில் 1 டிஎம்சி, 2 டிஎம்சி நீர் தேக்கக்கூடிய சிறு அணைகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு கருத்தில்கொள்ள வேண்டும். மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் பிரச்சினையாக இல்லாமல் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். தமிழகத்துக்கு எதிரான போக்கை கைவிடவேண்டும். கர்நாடகா அரசு இவ்விகாரத்தில் சட்டப்படி, நியாயப்பட்டி, அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும்.
டெல்லியில் ஊடகவியலாளர் வீட்டில் அத்துமீறி நுழைந்து லேப்டாப், மொபைல் போன்வற்றை உளவுப் பிரிவினர் கைப்பற்றியுளனர். இவ்விகாரத்தில் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அடையப்போகிறது. அதனையொட்டியே இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.