இடை நிலை ஆசிரியர்கள் அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடை நிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் சுமார் 4,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த போராட்டத்தில் நேற்று வரை சுமார் 180 பேர் உடல்நலம் பாதிப்படைந்து உள்ளனர். இந்த நிலையில் தான், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 பிரிவு ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சவுந்தர் தயாளன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஆகியோர் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், 3 பிரிவு ஆசிரியர்களும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. எனினும், பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவாக தீர்வு எட்டப்படும் என அமைச்சர் கூறியிருக்கிறார். உங்களின் கோரிக்கைகளை முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவாக முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். நல்ல அறிவிப்பு வந்தால் போராட்டம் வாபஸ் பெறும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று இன்று இரவே அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெறத்தயார். அதுவரை போராட்டம் தொடரும்” என்றார்.

அதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று டெட் முடித்த ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் வடிவேல் சுந்தர் தெரிவித்தார்.