தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதால் ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறையாக இருந்தது. மேலும், பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை இருந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் சென்னையில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தனர். இப்போது விடுமுறை முடிந்துள்ள நிலையில், அனைவரும் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் பல ரூட்களில் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தொடர் விடுமுறை முடிந்து மக்கள் ஒட்டுமொத்தமாகச் சென்னைக்குத் திரும்புவதால் ஆம்னி பேருந்துகளில் மிகப் பெரிய அளவில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக நாகர்கோவில், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வழக்கமாக ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், இப்போது ரூ. 4700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரை, சேலம், பெங்களூர், கோவை, திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ. 4500 முதல் ரூ. 5000 வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மோட்டார் வாகன சட்ட விதிகளை மதிக்காமலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் செயல்படுவதே முக்கிய காரணமாகும். இந்த கட்டண கொள்ளையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், தொடர் விடுமுறைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூரிலிருந்து சென்னை நகருக்கு வந்து வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் நிர்ணயிப்பதே இந்த கட்டண கொள்ளைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த கட்டண கொள்ளையைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததன் விளைவே இந்த தொடர் கட்டண கொள்ளைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்கும், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிப்பதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளை அதிகரித்து கூடுதலாக இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.