அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என தமிழ்நாடே போராக்களமாக மாறியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான கருத்து மோதலை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது கோவை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் உடனிருந்தார். பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, அதிமுக கூட்டணி முறிவு தொடர்பாக பாஜக இதுவரை மௌனம் சாதித்து வருகிறது. இதனால், மீண்டும் கூட்டணி பேச்சுகள் தொடங்குமோ என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு சூடாக பதில் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். சென்னை டிபிஐ வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஆசிரியர்களுடன் அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்ட ஜெயக்குமார், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினை கண்டித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர் கேள்வியை முடிப்பதற்குள் குறுக்கிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு? இன்று ஆசிரியர்கள் ஐந்தாறு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி பலர் மயங்கிக் கிடக்கிறார்கள். அதைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது. அவர்களின் கோரிக்கைகளுக்கு யாரும் காது கொடுக்கவில்லை. இன்று தமிழ்நாட்டில் டெங்கு பரவி ஊரெல்லாம் காய்ச்சலாக இருக்கிறது. 10 மாதங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனே டெங்குவால் பாதிக்கப்பட்டு இன்று வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருக்கிறது. அதைப் பற்றி எதுவும் பேசுவது இல்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னப்ப சத்திரம் திமுக கவுன்சிலர் கொல்லப்பட்டு உடல் காட்டில் கிடந்துள்ளது. திமுக கவுன்சிலருக்கே பாதுகாப்பு இல்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என தமிழ்நாடே போராக்களமாக மாறியுள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சனைகளால் கஷ்டப்பட்டு வரக்கூடிய சூழலில், அதையெல்லாம் விட்டுவிட்டு, இந்தக் கேள்விதான் பிரச்சனையா? எல்லா பிரச்சனைக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதோடு முடித்துக் கொள்ளலாம்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.