ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்வர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவிற்கு நெல்லை ஆட்சியர், எஸ்.பி., பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்தவர். சிறுசிறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து வருவோரின் பற்களை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மற்றும் போலீசார் பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்கிற்கு எதிராக வீடியோக்கள் வெளியிட்டு தங்களுக்கு நேர்ந்த சித்ரவதையை தெரியப்படுத்தினர். பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏஎஸ்பி பல்வீர்சிங் பற்களை பிடுங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.