முன்னாள் திமுக அமைச்சர் செங்குட்டுவன் மகன், மகளுக்கு சிறை தண்டனை!

முன்னாள் திமுக அமைச்சர் செங்குட்டுவனின் மகன் மற்றும் மகள் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. செங்குட்டுவன் மரணமடைந்ததால் மற்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகிலுள்ள வேலக்குறிச்சியைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன். மருங்காபுரி ஒன்றிய திமுக செயலாளராக 7 முறை பதவி வகித்த செங்குட்டுவன், மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராகவும் பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு மருங்காபுரி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செங்குட்டுவன், திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய செங்குட்டுவன் அதிமுகவில் இணைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆனால் அந்த ஆண்டு ஜூலை மாதமே முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செங்குட்டுவன், சிகிச்சைக்கு பிறகு மீண்ட நிலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரழந்தார்.

இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை கால்நடை துறை அமைச்சராக செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக தொடரப்பட்ட வழக்கில் செங்குட்டுவனின் மகன்கள் மகள் உட்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செங்குட்டுவனின் இரண்டு மகன்களான பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி செங்குட்டுவனின் சகோதரர் மகள் வள்ளி ஆகிய 4 பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட செங்குட்டுவனும் அவரது மருமகன் இறந்துவிட்டதால் மற்றவர்களுக்கு தண்டனை விதித்து திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.