அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை எதற்காக சந்தித்தார்கள் என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜகவினர் கூறுகையில் அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பேசி வருகிறோம் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி முறிவு முடிவு எடுத்தது எடுத்ததுதான். எந்த சூழலிலும் மாற்றமில்லை என கூறிவிட்டார். கூட்டணி முறிவு ஏற்பட்டவுடனே அதிமுகவினரும் பாஜகவினரும் நன்றி மீண்டும் வராதீங்க என ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டதற்கு உண்மையான காரணத்தை அறியும் பொறுப்பை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். ஒவ்வொரு பாஜக நிர்வாகியிடமும் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை அறிக்கையாக தயாரித்து பாஜக மேலிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக கூட்டணி மற்றும் பாஜக எதிர்காலம் ஆகியவை தொடர்பாக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்துகளை அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது பாஜகவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் போகும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட முயற்சிகள் செய்யப்பட வேண்டும். அது வரை அதிமுகவையோ அவர்களுடைய தலைவர்களையோ யாரும் விமர்சிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள அந்த தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஒரு வேளை அதிமுக ஏதாவது நிபந்தனைகளை விதித்தால் அதை பரிசீலனை செய்யலாம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் தமிழக பாஜகவுக்கு நல்லது என நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், என்ன நீங்கள் நினைத்த முடிவை எடுத்ததற்கு சந்தோஷமா என கேட்டார். மேலும் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை என்பதை போல எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் பாஜக மாநில துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமியோ அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார். இந்த நிலையில் நேற்றைய தினம் கோவை வந்த நிர்மலா சீதாராமனை பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 4 அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து பேசினர். இது பல்வேறு யூகங்களை கிளப்பியது. கூட்டணி பிளவுக்கு காரணத்தை கண்டறிய வந்த நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு என்பதால் கூட்டணி குறித்து பேசுகிறார்களோ என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் இதுகுறித்து பொள்ளாட்சி ஜெயராமன் கூறுகையில் தென்னை விவசாயிகளின் உரிமைகளை மீட்கவே நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். மற்றபடி அது அரசியல் சார்ந்த சந்திப்பு அல்ல என தெளிவுப்படுத்தினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருப்பதாக சொல்கிறீர்கள், பிறகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் எதற்காக சந்தித்து பேசினார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பதிலளிக்கையில், எம்எல்ஏக்கள், எம்பிக்களை எதற்காக தேர்வு செய்கிறோம் என சொல்லுங்கள். அதற்கு நிருபர்கள் தொகுதி பிரச்சினைகளை தீர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் என்றனர். ஆம்! தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஏற்கெனவே டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலாவை பொள்ளாட்சி ஜெயராமன் சந்தித்துள்ளார். அந்த வகையில்தான் கோவை வந்த போதும் அந்த கோரிக்கை குறித்து வலியுறுத்தவே அமைச்சர் நிர்மலாவை சந்தித்தாரே தவிர கூட்டணி பேச்செல்லாம் இல்லை. திமுக எம்பிக்கள் எதற்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தார்கள், அவர்கள் சந்தித்தால் காவிரி பிரச்சினைக்காக , நாங்கள் சந்தித்தால் கூட்டணிக்கு என எழுதுவதா என கேள்வி எழுப்பினார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். 2 கோடி தொண்டர்களின் உனர்வுகள் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணி விவகாரத்தில் பாஜக தரப்பில் எந்த அழுத்தமும் தரப்படவில்லை. பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவோ எங்களுக்கு ஒரு அழுத்தமும் தரவே இல்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என பாஜக, அதிமுகவிடம் ஒரு கோரிக்கையையும் வைக்கவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றியாக வேண்டும் என்று அதிமுக தரப்பில் நாங்கள் யாருக்கும் கோரிக்கை வைக்கவும் இல்லை.
இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? என்பது எல்லாம் தேவையில்லாத ஒரு கேள்வி. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் முடிவு செய்துவிட்ட பிறகு தற்போது பாஜகவுடனான கூட்டணி இல்லை என்பதால் இப்படியான கேள்விகள் எல்லாம் தேவை இல்லாதது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து மக்கள் பிரச்சனைகளுக்காக. தொகுதி சார்ந்த கோரிக்கைகளுக்காக. இதற்கும் கூட்டணி விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவினரும் கூடத்தான் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார்கள். அதற்காக கூட்டணி என சொல்ல முடியுமா?
பாஜக தரப்பில் லோக்சபா தேர்தலுக்கு 20 சீட்டுகள் கேட்கப்படவில்லை. பாஜகவினர் எந்த ஒரு சீட்டும் கேட்கவும் இல்லை. 20 சீட்டுகள் பாஜக கேட்டதாக சொல்வது தவறானது. 20 சீட்டு, 15 சீட்டு வேண்டும் என கேட்கவும் இல்லை; நாங்கள் அது பற்றி பேசவும் இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைக்கப்படும். அத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்துவோம்.
அதிமுகவுடன் கூட்டணி தொடர விரும்புவதாக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்திருப்பது அவரது கருத்து. ஆனால் எங்களது கருத்தும் நிலைப்பாடும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது. விபி துரைசாமி கருத்துக்கு நாங்க என்ன செய்ய முடியும்? இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.