இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமுரண்பாட்டை களைய நடவடிக்கை எடுப்பதுடன், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மாணவ, மாணவியருக்கு கல்வி நன்கு கற்றுத்தரப்பட வேண்டுமெனில், ஆசிரியர்கள் மனநிலை நன்றாக இருக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளனர்.
வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக கூறும் திமுக அரசு, ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கைகளை கிடப்பில் போட்டிருப்பது வேதனையளிப்பதாகும். இது மாணவ, மாணவியரின் கல்வியை பாதிக்க வழிவகுக்கும். முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு மேலும் காலம் தாழ்த்தாமல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை உடனே களையவும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.