கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் நேற்று மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், கர்ப்பிணி மகள் ஆகியோர் மரணம் அடைந்தனர். திருவட்டாறை அடுத்துள்ள ஆற்றூர் தொப்பவிளையைச் சேர்ந்தவர் சேம் (50). வாகன ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா(47). இவர்களுக்கு அஸ்வின் (19) என்ற மகனும், நீது ஆதிரா (24) என்ற மகளும் இருந்தனர். ஆதிராவுக்கு திருமணமாகி பிரசவத்துக்காக தாயார் வீட்டுக்கு வந்திருந்தார். அஸ்வின் நாகர்கோவில் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. சேம் வெளியே சென்றிருந்த நிலையில், தாய், மகன், மகள் ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டின் சுற்றுச்சுவரில் மின்கசிவு ஏற்பட்டு இருந்திருக்கிறது. இதை அறியாமல், நேற்று மாலை அஸ்வின் வீட்டுக்கு வெளியே சென்றபோது சுற்றுச்சுவரில் அவரது கைபட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த சித்ரா தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணியான ஆதிராவும் அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டு வெகு நேரமாக அங்கே கிடந்துள்ளனர். பின்னர் மூவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ ஓட்டுநர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (47), மகள் ஆதிரா ( 23) மற்றும் மகன் அஸ்வின் (19) ஆகிய மூவரும் நேற்று (அக்.3) அவர்களது வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். தனது குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.