கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. 58 பேர் பலியாக காரணமான இந்த தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் கைதான அல் உம்மா அமைப்பை சேர்ந்த பாட்சா உள்ளிட்ட மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைதாகினர். இவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் உடல்நலக்குறைவு காரணமாக சிறையிலேயே உயிரிழந்தனர். ஆயுள் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருந்து வரும் இவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மமக, எஸ்டிபிஐ, மஜக உள்ளிட்ட கட்சிகள் சென்னையில் இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர். இவர்களை அண்ணா பிறந்தநாளன்று விடுவிப்பது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் ஆணையத்தை அமைத்தார். அவரது அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்து உள்ளது.
இந்த நிலையில் கோவை சிறைவாசிகள் விடுதலையில் அரசு மெத்தனம் காட்டுவதாக இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மறுபக்கம் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிறைவாசிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கவுல் அமர்வு முன்பு, கோவை சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித்தும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “58 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்தனர். பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. கோவை நகரமே இந்த தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்படியான கொடுமையான சம்பவம் இது என்பதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி கவுல், இந்த வழக்கில் நிச்சயமாக நாங்கள் பிணை வழங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஜாமீன் இல்லை என்பதில் எங்களுக்கு எந்த விதமான மாற்றுக் கருத்து இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இந்த வழக்கு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என தெரிவித்த அவர், அப்போது இதுகுறித்து பேசலாம் என தெரிவித்துள்ளார்.