தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகி விட்டது. அதிமுக தலைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தது, அண்ணாவை பற்றி கூறிய தகவல்கள் அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்தது. அண்ணாமலைக்கு எதிராக காட்டமான கருத்துக்களை அதிமுக நிர்வாகிகள் பதிவிட்டனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிந்தது பிரிந்ததுதான் தொண்டர்கள் மனநிலையில் உள்ளதைத்தான் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக உடனான கூட்டணியை அவ்வளவு எளிதாக விடத் தயாராக இல்லை பாஜக. பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று பாஜக துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறியுள்ளார். அதை ஏற்க தயாராக இல்லாத அதிமுக நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அதிமுக தலைமையில் மீண்டும் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன், அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார். தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.