அமைச்சர் செந்தில் பாலாஜி எதிரான போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்ட 46 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015ம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய குற்றபிரிவு காவல்துறையிடம் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்களில் சில விளக்கங்களை கேட்ட நீதிபதி, அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.