பூணூல் விவகாரம்: இது பட்டியலின மக்களுக்கான அவமதிப்பு: கே. பாலகிருஷ்ணன்!

கடலூர் மாவட்டத்தில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்பு 100 தலித்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்நிலையில் தான் இது பட்டியலின மக்களுக்கான அவமதிப்பு எனக்கூறி ஆளுநர் ஆர்என் ரவியின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே ஆதனூர் கிராமம் உள்ளது. இங்கு தான் நந்தனார் பிறந்தார். இந்த நிலையில் ஆதனூரில் நந்தனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். விழாவில் 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் 100 ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், ‛‛மேன்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவு படுத்துவது தான் சனாதனம். மேலும் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்?. பூணூல் அணிவிக்கப்பட்ட பட்டியலின மக்களை கோயில் பூசாரி ஆக்குவாரா?” என கேள்விகள் எழுப்பி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டத்தில், நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் உள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நந்தனார் பிறந்த நாள் நிகழ்வில் பட்டியல் சாதி மக்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர் முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு நடத்தப்பட்டதும் அதில் ஆளுநர் பங்கேற்றதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். நிலவுடைமையாளரிடம் வேலை செய்த நந்தனாருக்கு பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதும், சிதம்பரம் நடராசர் சன்னதியில் நுழைய விரும்பிய அவரை நெருப்பில் ஐக்கியமாக்கியதுமே வரலாறாக உள்ளது. அவரை தீயிட்டு கொளுத்திய கொடிய சாதிய வன்மம் கொண்ட கூட்டத்தின் கருத்தையே, இப்போது பட்டியல் சாதியினருக்கு அவரது பிறந்த நாளில், அவரது மண்ணில் பூணூல் அணிவிப்பதன் மூலம் மீண்டும் ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிறப்பின் அடிப்படையில் உயர்வு கற்பித்தலை நியாயப்படுத்துவது நந்தனாரை அவமதிக்கும் செயலாகும். இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்ததன் மூலம் பூணூல் தான் புனிதத்தின் அடையாளம் என நிலைநாட்ட விரும்பும் கூட்டத்தினர் பொதுவாகவே அனைத்து மனிதர்களும் சமம் என்ற அரசமைப்பு சட்ட விழுமியத்திற்கு எதிராகவே உள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்த நிகழ்ச்சியின் அங்கமாக இருந்துள்ளார். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை இழிவுபடுத்தும் இந்தச் செயலை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.