“மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழகத்தில் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டம் நான் முதல்வன் திட்டம். பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு படித்து முடித்தப் பிறகு என்ன பணிக்குச் செல்வது என்பதற்கான வழிகாட்டும் திட்டம்தான் இது. கடந்த ஆண்டு, முதல்வரின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்ட திட்டம். 10 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. ஆனால், இதுவரை 13 லட்சம் என்ற இலக்கை அடைந்திருக்கிறோம்.
பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் 1500 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினேன். இன்று மீண்டும் ஒரு 1200 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் மூலம் பணி பெற்றவர்களுக்கு ஒரு வருடத்துக்கு குறைந்தது 2.50 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் அளவுக்கு இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.
அப்போது அவரிடம், வரும் மக்களவைத் தேர்தலில், திமுக – பாஜக இடையேதான் போட்டி என்று அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இதுகுறித்து அதிமுக தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும் ஒன்றுதான். எங்கள் கட்சியின் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலை எதிர்கொள்வோம். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழகத்தில் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்றார்.
அப்போது ஆளுநர் தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது எனப் பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக ஆளுநர் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் சென்று பார்க்கிறாரா, இல்லையா என்று தெரியவில்லை. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் இல்லை என்று சொல்லமாட்டேன். இருந்தாலும், ஆளுநர் அவருக்கான பணிகளைச் செய்யாமல், தேவையில்லாத அரசியல் எல்லாம் இங்கு பேசிக்கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனறார்.
அப்போது, ஆசிரியர் போராட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆசிரியர்கள் போராட்டம் முடிவடைந்துவிட்டது. தயவுசெய்து மறுபடியும் ஆரம்பித்துவிட்டு விடாதீர்கள். அவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். நாங்களும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம். நிதிநிலைக்கு ஏற்ப, தமிழக முதல்வர் ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறார்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டனர். ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் நானும் கேட்டுக்கொள்கிறேன். பள்ளிக் கூடங்கள் எல்லாம் திறந்துவிட்டன. தயவுகூர்ந்து தங்களுடைய பணிகளைத் தொடருங்கள். நிச்சயமாக முதல்வர் உரிய நேரத்தில் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்” என்றார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் மகனே பேசியிருக்கிறார் என்று பிரதமர் கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஏற்கெனவே பலமுறை பதில் சொல்லிவிட்டேன். சிஏஜி அறிக்கையைப் பற்றி பேசினோம், மணிப்பூர் மாநிலம் கடந்த 5 மாதங்களாக என்ன நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த விவகாரத்தை திசைதிருப்பத்தான் சனாதன சர்ச்சையை பற்றி பேசுகின்றனர். சனாதனம் குறித்து நான் தொடர்ந்து பேசுவேன். பெரியார், அம்பேத்கர் சனாதனம் குறித்து பேசினார்கள். எங்கள் கட்சித் தலைவர்கள் பலரும் பேசியிருக்கின்றனர். அதைவிட நான் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை. எனவே, பாஜகவினர் திசைத்திருப்ப வேண்டாம்” என்று உதயநிதி கூறினார்.