கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு நேற்று மாலை உயிரிழந்தார். இந்த நிலையில், ஒரிசா பாலு மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆமைகள் வழித்தடம் குறித்தும் தமிழர்களின் கடல் பயணம் குறித்தும் ஆய்வு செய்து வந்தவர் ஒரிசா பாலு. இவர் கடந்த ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஒரிசா பாலு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. வாய்ப்புற்று நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட ஒரிசா பாலு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கேரளாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். குமரி கண்டம் தொடர்பான ஆய்வையும் ஒரிசா பாலு எழுதிக் கொண்டு இருந்தார். ஒரிசா பாலுவின் உயிரிழப்பு இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரிசா பாலு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வரலாற்று ஆய்வாளரான திரு. ஒரிசா பாலு (எ) சிவபாலசுப்பிரமணி அவர்கள் மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன். திரு. ஒரிசா பாலு அவர்கள் தமிழர்களின் வரலாற்றுத் தொடர்புகளைக் கடல்வழியே தேடிக் கண்டு வெளிப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயலாற்றி வந்தவர் ஆவார். தன்னலம் கருதாத தமிழ்நலம் காக்கும் அவரது உழைப்பும் ஆர்வமும் என்றும் மதிக்கப்படும். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழன்பர்கள் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அதில் கூறியுள்ளார். இதேபோல் ஒரிசா பாலுவின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.