காசாவில் இருந்து பாய்ந்த ஏவுகணைகள்: ‘போர் நிலை’ அறிவித்த இஸ்ரேல்!

சர்ச்சைக்குரிய காசா பகுதியில் இருந்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. இது தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹாமஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இஸ்ரேல் பதில் தாக்குதல்களை காசாவை நோக்கி நடத்துவதால் காசா குடிமக்கள் எப்போதும் உயிர்ப்பயத்துடன் தான் இருக்கிறார்கள் என்பது நடுநிலை நாடுகளின் கருத்து.

இந்நிலையில், இன்று காலை இஸ்ரேலை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. ஒரு சில ஊடகங்கள் 5000 ஏவுகணைகள் வரை பாய்ந்ததாகக் கூறுகின்றன. ஆனால் ஏவுகணைகளின் எண்ணிக்கையை இஸ்ரேல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால் சற்றும் எதிர்பாராத திடீர் ஏவுகணைகள் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க இஸ்ரேல் அரசு போர் நிலை சூழல் உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையானது ஹமாஸ் தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளது. பாராகிளைடிங் செய்து தீவிரவாதிகள் ஊடுருவியக் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இருப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் காசா பகுதியை ஒட்டிய இடங்களில் வசிக்கும் இஸ்ரேல் நாட்டு மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

ஐடிஎஃப் எனப்படும் இஸ்ரேல் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மையப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக காசாவை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது, பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஹமாசை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. இந்த அமைப்பின் ராணுவ தலைவராக அறியப்படுபவர் முஹம்மது தெய்ப். பெரும்பாலும் வெளியில் முகம் காட்டாமல் நிகழ் தலைவராகவே இருந்து வரும் இவர், இந்த தாக்குதலை தொடர்ந்து வாய் திறந்து இருக்கிறார். இதனை தங்கள் அமைப்புதான் செய்தது என அவர் பகிரங்கமாக தெரிவித்து உள்ளார். ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியை இஸ்ரேல் இழிவுபடுத்தியதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நாங்கள் எதிரியை எச்சரித்தோம். அவர்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அல் அக்சா மசூதியை இழிவுபடுத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் இறங்கியது.” என்றார்

ஹமாஸ் படையினருக்கு அவர் பிறப்பித்த உத்தரவில், “உங்களிடம் உள்ள அனைத்து கருவிகள் மற்றும் யுக்திகளின் மூலம் குடியேற்றங்களின் மீது தாக்குதல்களை நடத்துங்கள். இன்று யாரெல்லாம் துப்பாக்கி வைத்து உள்ளீர்களோ அவர்கள் அதை வெளியில் எடுங்கள். இது நமக்கான நேரம். உங்கள் கோடாரி, வாகனம், லாரியும் எல்லோரும் புறப்படுங்கள். புதிய வரலாறு இன்று பிறக்கிறது. ஒளிமயமான, மரியாதைக்குரிய வரலாறு அது. இஸ்ரேலில் வாழும் அரபு மக்களும், இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட வேண்டும். நாங்கள் எதிரிகளின் படைகள் உள்ள இடங்கள், ராணுவ தலங்கள், விமான நிலையங்களை மட்டுமே குறிவைத்து இருக்கிறோம். 5000 ஆயிரம் ராக்கெட்டுகள் மற்றும் செல் குண்டுகள் மூலம் தாக்கி உள்ளோம்.” என்று கூறி உள்ளார்.

அல் அக்சா மசூதிக்கும் இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் போலீஸ் படைகள் நுழைந்ததற்கும், இஸ்லாமியர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதற்கும் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அதை சுட்டிக்காட்டி உள்ளார் ஹமாஸ் தலைவர்.

ஏற்கெனவே உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் சூழலில் இஸ்ரேல் மீதான இந்தத் தாக்குதல் இஸ்ரேல் – பாலஸ்தீன போருக்கு தூபம் போடுவதுபோல் அமைந்துள்ளது.