இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் 200 பாலஸ்தீனியர்கள் பலி!

பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. 500 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் இன்று ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக போரை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அல் அக்சா ஃப்ளட்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் நேரப்படி காலை 6.30 மணியளவில் தரை வழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் என பல முனைகளில் இஸ்ரேலுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் ஓபிர் லிப்ஸ்டீனும் கொல்லப்பட்டுள்ளார். ஐநூறுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பல முனைகளிலும் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலால், ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. ராக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்களை, ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டெரோட் நகரில் பாலஸ்தீன போராளிகள் வழிப்போக்கர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சமூக ஊடகங்களில் பரவிய காட்சிகள் சீருடையில் பாலஸ்தீனியர்கள் எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்டதைக் காட்டுகின்றன. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும் இஸ்ரேலும் தற்போது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் ஹமாஸ் தீவிராதிகள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். காசா பகுதியில் 200 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருதரப்பிலும் தற்போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாலஸ்தீனத்திலிருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்கிய நிலையில், போர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இஸ்ரேல் மக்களே, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம். ஒரு நடவடிக்கை எடுக்காமல் வெற்றியைப் பெற முடியாது.. போர்தான் என்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் இப்போது போர்க்களத்தில் உள்ளோம். போரில் வெல்வோம் என்று அவர் விடியோவில் தெரிவித்துள்ளார். நமது எதிரி அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும், இதுவரை அவர் கண்டிராத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டிருக்கிறார்.