தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார்: பெ.மணியரசன்

தொல்லியல் ஆய்வில் நிரந்தர ஒளிச்சுடராக ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விளங்குவார் என்று பெ.மணியரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளதாவது:-

தமிழர் தொல்லியல் ஆய்வறிஞர் ஐயா ஒரிசா பாலு அவர்கள் 06.10.2023 அன்று மருத்துவமனையில் காலமான செய்தி பெரும் துயரம் அளிக்கிறது. தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பு! தொல்லியல் ஆய்வில் மாறுபட்ட புதிய ஆய்வு முறையைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி அதில் சாதனை படைத்தவர் ஒரிசா பாலு அவர்கள். அவர்களின் ஆய்வுச் சிறப்பில் முதன்மையானது தமிழர்களின் தொன்மைத் தாயகம் குமரிக் கண்டமே என்று நிறுவியதும், குமரிக் கண்டத்திலிருந்து பல்வேறு கண்டங்களுக்குத் தமிழர்கள் பழங்காலத்திலேயே பரவிச் சென்றதை நிறுவியதும் ஆகும்.

தமிழர்கள் பல்வேறு கண்டங்களுக்கு பரவி வாழ்ந்ததை கடல் ஆமைகளின் பயணத்தை வைத்து நிறுவினார். பல்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் உள்ள சொற்கள் தமிழ்ச் சொற்களின் மூலத்திலிருந்து உருவானவை என்பதை மொழியியல் அடிப்படையிலும் நிறுவினார். தமிழ் மொழியின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் உள்ள பற்றினால் சுறுசுறுப்பாகத் தமிழ்நாடெங்கும் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கு பெற்று ஆய்வுரைகள் நிகழ்த்தினார். உடல் நோயுற்ற காலத்திலும் இப்பணிகளைத் தொடர்ந்தார். தமிழர் தொன்மையை ஆராய்ந்து அறிவதற்கான பயிற்சியை இளையோருக்கு அக்கறையுடன் கற்றுத் தந்த சான்றோராக விளங்கினார் ஒரிசா பாலு அவர்கள்.

மனித குலத்தின் மிகக் கொடிய நோயாக உள்ள புற்று நோயால் தாக்கப்பட்டு சிக்கிச்சை பெற்று வந்த காலத்திலும் அவர் தமது ஆய்வுப் பணியை நிறுத்தவில்லை. கருத்துரைகள் வழங்குவதையும் நிறுத்தவில்லை. அறுபது அகவையிலேயே அவருக்கு இறுதி நிலை வந்தது பேரிழப்பாகும். ஐயா ஒரிசா பாலு அவர்களுடன் கலந்து பேசி கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளக் கூடிய நல்வாய்ப்புகளையும், ஐயங்களுக்கு அவருடன் பேசி தெளிவு பெறும் வாய்ப்புக்களையும் பெற்றிருந்தேன்.

ஆய்வறிஞர் ஒரிசா பாலு அவர்களுக்குத் துயரத்தோடு இறுதி வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்துகிறேன். தமிழர் தொல்லியல் ஆய்வில் ஒரிசா பாலு அவர்கள் நிரந்தர ஒளிச்சுடராக விளங்குவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.