காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டுமென பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படவிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடா் அக்.9-ல் கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்பட கூட்டரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது 2023-24-ம் ஆண்டில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டுமென பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. கர்நாடக மற்றும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9ஆம் தேதி தொடங்கும் நிலையில் அன்றைய தினமே காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.