இஸ்ரேலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பதாக அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. போர் தீவிரமடைவதால் தங்களை மீட்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் படையினர் நேற்று காலை முதல் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். 2 மணிநேரத்தல் 5000 ராக்கெட்டுகளை ஏவி வான்வழித் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினர் பின்னர் தரை வழித் தாக்குதலையும் தொடங்கியது. ஹமாஸ் படையினரின் தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் போர் தொடங்கியுள்ளதாக அறிவித்தார் இஸ்ரேல் பிரதமர் நேதயான்ஹு.
ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் காயமமைந்துள்ளனர். தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் குண்டு மழை பொழிய தொடங்கியது இஸ்ரேல். 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குண்டு மழை பொழியும் அதி நவீன ட்ரோன்கள் மூலம் குண்டுகளை குவித்துள்ளது.
இதில் காசா நகரில் உள்ள வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனால் காசாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் 15 தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டுள்ளதாக அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. 15 பேரும் ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வருவதாகவும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது.
தாங்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில் போர் தீவிரம் அடைந்து வருவதால் தங்ககளை மீட்குமாறு 15 பேரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் அயலக தமிழர் நலவாரியம் கூறியுள்ளது. இஸ்ரேலில் உள்ள தமிழர்களை தூதரகம் முலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அயலக தமிழர் நலவாரயம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள தமிழக அரசு அவசர உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. +91 87602 48625, +91 99402 56444, +91 96000 23645
என்ற தொலைபேசி எண்ணும் nrtchennai@tn.gov.in , nrtchennai@gmail.com ஆகிய இமெயில் முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.