ஆப்கானிஸ்தான் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்: 320 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. ஹெராட் என்ற பகுதியில் வடமேற்கில் 40 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொன்டிருந்தது. இதேபோல அடுத்தடுத்து 5 முறை அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 முதல் 4.6 வரை பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளிடையே பொதுமக்கள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். வீடுகளை விட்டு வெளியேறி ஓடிவந்த பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானையை உலுக்கிய இந்த நிலநடுக்கத்தால் மொத்தம் 320 பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.