அத்திப்பள்ளி பட்டாசு விபத்து சம்பவத்தில் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: எடப்பாடி

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து சம்பவத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை, இந்த திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.