அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் விதிகளை கடுமையாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் தமிழ்நாட்டின் ஓசூர் பேடரப்பள்ளியைச் சேர்ந்த நவீன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்த பட்டாசு கடை, குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சிதறின. இந்த விபத்தால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பெரும் போராட்டத்துக்கு பின் அணைத்தனர். இந்த விபத்தில் முதலில் 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக பலி எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று நள்ளிரவு வரை பலி எண்ணிக்கை 13 ஆக இருந்தது. இன்று காலை வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலியான அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கிருஷ்ணகிரி, விருதுநகர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை என பல்வேறு மாவட்டங்களிலும் வெடி விபத்துகள் நிகழ்ந்து பலர் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.