தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி வானம் வரை உயர்ந்துள்ளது: குஜராத் மருத்துவ குழு!

தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது வானம் வரை உயர்ந்து நிமிர்ந்து அளவுக்கு உள்ளது என்று குஜரத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் குழு பாராட்டியுள்ளது.

இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது சென்னை. தமிழ்நாட்டில் உள்ள சிறந்த மருத்துவ கட்டமைப்புகளே இதற்கு காரணம். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்கள் பலரும் சர்வதேச அளவில் சிறந்தவர்களாக விளங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை பார்வையிட மருத்துவ குழுவினர் வருகை தந்தனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் குஜராத் மருத்துவ குழுவினருடன் கலந்துரையால் கூட்டமும் நடைபெற்றது. மாநிலங்களுக்கு இடையேயான வளர்ச்சி திட்டங்களை பகிர்ந்து கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத்தில் இருந்து 60 அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் சென்னைக்கு வந்து இங்குள்ள மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிட்டனர்.

பின்னர் குஜராத் மருத்துவ குழுவினர் கூறுகையில், தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி என்பது வானம் வரை உயர்ந்து நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளது. தமிழ்நாடு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் சேவைகளை பார்த்தால் வியப்பாக உள்ளது. ஒரே மருத்துவமனை வளாகத்தில் எக்ஸ்ரே முதல் அறுவை சிகிச்சை அரங்குகள் வரை இருப்பது பெரும் சாதனை” என்று தெரிவித்தனர்.

குஜராத் மருத்துவ குழுவினர் தமிழ்நாடு வருகை தந்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “குஜராத் மாநில மருத்துவத் துறை அலுவலர்கள் 60 பேர் கடந்த 3ம் தேதி தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை பார்வையிட வருகை தந்துள்ளனர். ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டனர். தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை அவர்கள் பாராட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் மகப்பேறு மருத்துவம், இதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுவதை குஜராத் மருத்துவக்குழு பாராட்டியது” என்றார்.