தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துளனர். இந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி உதவி அறிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் அத்திப்பளி அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனைக்காக இங்கு அதிகளவிலான கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடை மற்றும் குடோனில் தீ கொழுந்துவிட்டு பற்றி எரிந்தது. மேலும் அருகில் உள்ள பட்டாசு கடைக்கும் தீ பரவியது. இதில் மொத்தம் 5 பட்டாசு கடைகள் தீக்கிரையாகின. மேலும் நாலாபுறமும் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களும் விபத்தில் சிக்கினர். இந்த வெடி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்ததாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பட்டாசு வெடி விபத்தின் காரணமாக அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இந்த தீ விபத்தானது பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன. பட்டாசு கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிள்கள், வேன் மற்றும் சரக்கு லாரி தீயில் கருகி எலும்புக்கூடாகியது. பட்டாசு தீ விபத்தில், கடையில் இருந்த ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் கர்நாடக எல்லைப்பகுதியில் ஏற்பட்ட இந்த பட்டாசு வெடி விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பட்டாசு வெடி விபத்து சம்பவம் செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், வெடி விபத்தில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி உதவி வழங்கியும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு – கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசுக் கடையில் இன்று (7-10-2023) ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பி வைத்துள்ளேன்.
மேலும், இந்த சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக் கொண்டு வரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி அவர்களையும், அமைச்சர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை திரு.மா.சுப்பிரமணியன் அவர்களையும் அனுப்பி வைத்துள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட உத்தவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.