அரசு மருத்துவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இன்று தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரிய ஊதிய உயர்வு, மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை ஆகிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்கூட, தமிழக முதல்வர் உடனே உதவிக்கரம் நீட்டுகிறார். ஆனால், தமிழகத்தில் கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி அரசு வேலை கேட்டு கண்ணீருடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், முதல்வரின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே சிறந்த ஊதியம் வழங்குவது தானே நியாயம்? ஆனால் மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ.40 ஆயிரம் குறைவாக இங்குள்ள மருத்துவர்களுக்கு தரப்படுகிறது. எனவே, அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சுகாதாரத் துறை சாதனைகளைப் பட்டியலிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் தமிழக சட்டப்பேரவையில் நீண்டகாலமாக அரசு மருத்துவர்களின் நலன் சார்ந்த எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எனவே, அரசு மருத்துவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இன்று தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரிய ஊதிய உயர்வு, மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை ஆகிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு, மருத்துவர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.