இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரிய சாந்தன் வழக்கில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகல்!

இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான சாந்தன், இலங்கையை சேர்ந்தவர். அவர் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இலங்கையில் உள்ள தனது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனிருந்து அவரை கவனித்துக்கொள்ளும் வகையில் திருச்சி முகாமில் இருந்து விடுவித்து இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென கடந்த மாதம் மனு அளித்ததாக தெரிவித்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் தன்னை இலங்கை அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த மனுவை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.