7 கோடி மக்களை அவமானப்படுத்திய கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் பேசினார்.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி, முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மறைந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேள்வி நேரம் நிறைவடைந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
பின்னர் முதலமைச்சரின் தனித்தீர்மானத்தை வரவேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் பேசுகையில், “தமிழ்நாட்டு முதலமைச்சரின் திருவுருவப்படம் அசிங்கப்படுத்தப்படுகிறது. சமாதி செய்வது போல் காட்சிப்படுத்தபடுகிறது.இதெயெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்து இனமோதலை உருவாக்குகிறது” என ஆவேசமாக பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர். “முதலமைச்சரை தவறாக சித்தரித்தார்கள் என்பதை நீக்கிவிடுகிறேன்” என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய வேல்முருகன், முதலமைச்சரை அவமானப்படுத்தி உள்ளார்கள். எதிர்வினை தமிழ்நாட்டில் இல்லை. சூடு சொரணை இல்லையா எங்களுக்கு. 7 கோடி மக்களை அவமானப்படுத்திய கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்; நீங்கள் புகட்டவில்லை என்றால் நாங்கள் புகட்ட தயாராக உள்ளோம். அனுமதி தாங்க. இந்திய ஒன்றிய அரசு நியாயமாக துணை ராணுவத்தை அனுப்பி அணையை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை திறந்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தை அவையில் கொண்டு வர வேண்டும் என்று கூறி முதலமைச்சர் தீர்மானத்தை வரவேற்கிறேன் என்றார்.
பின்னர் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், நான் எதை நினைத்து பயந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறேனோ, அதை மாண்புமிகு உறுப்பினர் பேசுகிறார். இங்கு பேசும் விளைவு, எவ்வுளவு பேர் அங்கு உள்ளார்கள், அவர்களுக்கு என்ன ஆகும் என்பதை யோசித்து பேசுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ரியாக்ஷன் எங்கு நடக்கும் என கூறினார்.