அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்: சபாநாயகர்

அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு கூறி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் அக்டோபர் 11ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என கூறினார்.

நாளைய தினம் 2023-24ஆம் ஆண்டில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்றும், நாளை மறுநாள் 2023-24ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு, அவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அது அவர்கள் உரிமை. 2013 பிப்ரவரி 6ஆம் தேதி அன்று அன்றைய சபாநாயகர் தனபால் அவர்களிடம் இன்றைய கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் ஒரு கோரிக்கை வைக்கிறார். அவர் சொன்ன பதிலை நான் தற்போது சொல்கிறேன்.

“சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்குவது சட்டப்பேரவை தலைவர் தலைவரின் முழு உரிமை, முழு அதிகாரம். ஏதேனும் உங்களுக்கு தேவை என்றால் சட்டமன்றத்தில் இதை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. எனது அறைக்கு வந்து சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன்” என்றார். அந்த பதிலையே தற்போது நானும் பதிலாக தருகிறேன் என கூறினார்.