முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை அமைச்சர் துரைமுருகன் கிண்டல் செய்து கருத்து சொன்னதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும் முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், கே பழனியம்மான், ஆண்ட முத்து, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து காவிரி நீர் விவகாரம் குறித்து தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த நிலையில் பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1296 கோடி ரூபாய்க்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரை மக்களுக்கு தங்கு தடையின்றி இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் பிரச்சினை வராதபடி வழிவகை செய்யப்பட்டது. இந்த பணிகள் அமைச்சர் துரைமுருகனின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் பணிகள் சற்று ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதிகாரிகளை கேட்டால் டிசம்பர் மாதத்தில் பணிகள் முடிந்துவிடும் என்கிறார்கள். ஆனால் இன்னும் உயர்மட்ட தொட்டிகளே கட்டவில்லை. தற்போது மதுரை மக்களுக்கு சாக்கடை நீர் கலந்து வருகிறது. அது போல் அல்லாமல் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் எப்போது கிடைக்கும் என பேரவைத் தலைவர் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்றார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு பதில் அளிக்கையில், பெரியாறு அணையின் நீராதாரமாக கொண்டு கம்பம் நகரிலிருந்து மதுரை மாநகராட்சிக்கு 180 எம்எல்டி திட்டம் தொடங்கப்பட்டது. நீங்கள் உங்கள் ஆட்சியில் திட்டத்தை ஆரம்பித்து வைத்தீர்களே தவிர அங்கு கிணறு தோண்டும் அனுமதியை வனத்துறை தரவில்லை. அதை நாங்கள் வந்து அனுமதியை வாங்கி 60 கி.மீ. தூரம் பைப் லைன் வைக்கும் பணி பாக்கி இருந்த நிலையில் கிட்டதட்ட 15 கி.மீ. மட்டுமே பைப் லைன் வைக்கும் பணிகள் நிலுவையில் இருக்கிறது. வைகை நதியோரமாக 4 மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டியிருக்கோம். நீங்கள் பார்க்கவில்லை, அதை பார்த்துவிட்டு வாங்க. செல்லூர் ராஜூ கேட்டது போல் சுத்தமான தண்ணீரை நாங்கள் வழங்குவோம் என்றார்.
உடனே அமைச்சர் துரைமுருகன் எழுந்து செல்லூர் ராஜு அவர்களே நீங்கள் கேட்டது போல் தண்ணீர் நாங்கள் கொடுப்போம். தண்ணீர் காலியாகாமல் இருக்க தெர்மாக்கோல் போட்டு நாங்கள் மூடி வைத்திருக்கிறோம் என கூறினார். உடனே அவையில் சிரிப்பலை எழுந்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ வைகை அணியில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாக்கோல் ஷீட்டுகளை போட்டு மூடுவதாக ஒரு முயற்சியை மேற்கொண்டார். ஆனால் அவரை கரைக்கு வருவதற்கு முன்பே தெர்மாக்கோல்கள் வந்துவிட்டன. இதனால் தெர்மாக்கோல் விஞ்ஞானி என செல்லூர் ராஜு அழைக்கப்பட்டார்.